ஜெய்ப்பூர்: கரும்பு விலையை உயர்த்த வேண்டும், நிலுவைத்தொகை ரூ.250 கோடியைக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பஞ்சாப் மாநில விவசாயிகள் காலவரையறை அற்ற போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மறியல் போராட்டங்களில் விவசாயிகள் திரளாகப் பங்கேற்று வருகின்றனர். இதன் காரணமாக சாலை, ரயில் போக்குவரத்து முடங்கியது.
இதுவரை மொத்தம் 69 ரயில்கள் ரத்தாகி உள்ளன என்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. சில ரயில்கள் ஆங்காங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
இதேபோல் பல்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று விவசாயிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் பல மாதங்களாக நீடித்து வரும் தொடர் போராட்டங்களில் பஞ்சாப் மாநில விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர். இப்போது சொந்த மாநிலத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

