தாய்மொழிக்கு முன்னுரிமை

தாய்மொழிக்கு முன்னுரிமை

3 mins read
1457a7b6-a84e-4357-8079-54987887f9a9
-

பெங்களூரு: துணை அதி­பர் வெங்­கையா நாயுடு பெங்­க­ளூ­ரு­வில் உள்ள ஆளு­நர் மாளி­கை­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்தித்துப் பேசினார். அப்­போது அவர், தாய்­மொ­ழி­யின் முக்­கி­யத்­து­வம் பற்றி வலி­யு­றுத்­தி­னார்.

"நாம் எப்­போ­தும் தாய்­மொ­ழிக்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும். அத­னால் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் தாய்­மொ­ழி­யில் பேச நான் அனு­ம­திக்­கி­றேன். தாய்­மொ­ழி­யில் பேசும்­போது நாம் சொல்ல வரும் விஷ­யத்தை முழு­மை­யா­கப் புரி­யும்­படி சொல்ல முடி­யும். ஆங்­கி­லம் வேண்­டாம் என்று சொல்­ல­வில்லை. ஆனால் தாய்­மொ­ழிக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டி­யது அவ­சி­யம். எந்த மொழி­யாக இருந்­தா­லும் சரி, தாய்­மொழி அவ்­வ­ளவு அரு­மை­யா­னது.

"மத்­திய அரசு இப்­போது பொறி­யி­யல் கல்­லூ­ரி­களில் தாய்­மொழி வழி கல்­வியை அறி­மு­கம் செய்­துள்­ளது. இது வர­வேற்­கத்­தக்­கது. இத­னால் தாய்­மொழி வள­ரும். நான் எங்கு சென்­றா­லும் தாய்­மொ­ழி­யில் பேச­வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்தி வரு­கி­றேன்," என்­றார் திரு வெங்­கையா நாயுடு.

துணை அதி­பர் வெங்­கையா நாயுடு பத்து நாள் சுற்­றுப்­ப­ய­ண­மாக கடந்த 16ஆம் தேதி கர்­நா­டக மாநி­லத்­திற்கு வருகை மேற்­கொண்டார். அங்கு பல்­வேறு நிகழ்ச்­சி­களில் அவர் கலந்­து­கொண்­டார்.

இந்­தப் பய­ணத்­தின்போது விஜயநகர மாவட்டத்தின் ஹம்­பி­நகரில் உள்ள பாரம்­ப­ரிய பாது­காக்­கப்­பட்ட வர­லாற்­றுச் சின்­னத்தை குடும்­பத்­து­டன் பார்­வை­யிட்டார். அங்கு நடந்த நிகழ்ச்­சி­யில் நாட்டுப்புறப் பாடல் பாடிய சிறுமியை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

நாட்­டுப்­பு­றக் கலை­களை ஊக்கு­விக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்றும் இது­கு­றித்து சம்­பந்­தப்­பட்ட மத்­திய அமைச்­ச­ரு­டன் பேசப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடா­ளு­மன்­றக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்­ளும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் செயல்­பாடு பற்றி பேசிய திரு வெங்­கையா நாயுடு, "அவைத் தலை­வர் பீடத்தை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மதிக்க வேண்­டும். பதி­னாறு நாட்­கள் நாடா­ளு­மன்­றம் நடை­பெற்­றது. அந்த 16 நாட்­களும் அவை முடக்­கப்­பட்­டது. கேள்வி நேரத்­திற்­குக் கூட வாய்ப்பு வழங்­க­வில்லை. இது எனக்கு மிகுந்த வருத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

"அவை­யில் எல்லா உறுப்­பி­னர்­களும் ஒழுங்­கீ­ன­மாக நடந்து கொள்­வது இல்லை. பத்து விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தரம் தாழ்ந்து நடந்­து­கொள்­கின்­ற­னர். நாடா­ளு­மன்ற அவை­யில் ஆரோக்­கி­ய­மான முறை­யில் விவா­தங்­கள் நடை­பெற வழி­காண வேண்­டும். அதற்கு திறமை படைத்­த­வர்­கள் நாடா­ளு­மன்­றத்­திற்கு உறுப்­பி­னர்­க­ளாக வர­வேண்­டும்.

"அண்­மைய கால­மாக சாதி, பணம், குற்­றப்­பின்­னணி கொண்­ட­வர்­கள் வரத்­தொ­டங்­கி­யுள்­ள­னர். இது ஜன­நா­ய­கத்தை வலு­வி­ழக்கச் செய்­யும்," என்று வெங்­கையா நாயுடு எச்­ச­ரித்­தார்.

"ஆளும் கட்­சி­யி­னர் பல திட்­டங்­களை முன்­மொ­ழிய வேண்­டும். எதிர்த்­த­ரப்­பி­னர் அது­பற்றி தங்­க­ளின் கருத்­து­க­ளைக் கூற­வேண்­டும். அது­கு­றித்து அவை முடிவு எடுக்க வேண்­டும். இதற்கு அனைத்­துக்­கட்­சி­களும் ஒத்­து­ழைத்­தால்­தான் இது சாத்­தி­ய­மா­கும்," என்­றார் வெங்­கையா நாயுடு.

"மேக­தாது, காவி­ரிப் பிரச்­சினை உள்­ளிட்ட விவா­திக்க வேண்­டிய, தீர்­வு­காண வேண்­டிய எத்­த­னையோ மக்­கள் பிரச்­சி­னை­கள் உள்­ளன. அவற்­றுக்­கெல்­லாம் தீர்­வு­காண்­பது குறித்­துத்­தான் அவை­யில் விவா­தங்­கள் நடை­பெ­ற­வேண்­டும்.

"அர­சி­யல் கட்­சி­கள் தங்­க­ளின் உறுப்­பி­னர்­கள், நாடா­ளு­மன்­றத்­தில் எவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்­டும் என்று கற்­றுக்கொடுக்க வேண்­டும். அது­கு­றித்து ஒரு பிர­மா­ணப் பத்­தி­ரத்தை அர­சி­யல் கட்­சி­கள், மக்­கள் முன் வெளி­யிட வேண்­டும்," என்று வெங்­கையா கேட்­டுக் கொண்­டார்.

தனது பத்து நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லி திரும்பிய வெங்கையா நாயுடுவை முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலோட்டும் கெம்பெகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று வழியனுப்பி வைத்தனர்.