திருவனந்தபுரம்: கேரளாவில் தினசரி கொரோனா தொற்று 24,000ஐத் தாண்டி உள்ளது. இந்நிலையில் அடுத்த நான்கு வாரங்களுக்கு மக்கள் மிக விழிப்புடன் இருக்குமாறு கேரள சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கேரளாவில் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் தொற்று அதிகரிப்பதால் அங்குள்ளோர், அண்டை மாநிலங்களான தமிழகம் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
கேரளாவில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் தினசரி தொற்றுப் பாதிப்பு அதிகரித்து உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 24,296 பேர் புதிதாக தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகினர். நோய் பாதித்த 173 பேர் மரணம் அடைந்துவிட்டனர். மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவோர் விழுக்காடு 18.04 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நாடுமுழுவதும் 37,593 பேருக்குக் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அதில் கேரளாவில் மட்டும் 24,296 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மீண்டும் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ''கொவிட் 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். எனவே ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்,'' என்றார்.
இதுகுறித்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
பொதுமக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மற்றொரு முடக்கநிலையை அமல்படுத்துவது சாத்தியமல்ல. ஓணம் விடுமுறைக்குப் பிறகு கட்டுப்பாட்டுத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
எனவே, அடுத்த நான்கு வாரங்களில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். வரவிருக்கும் மூன்றாம் அலை தொற்று அச்சுறுத்தலை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூன்றாவது அலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்க சுகாதாரத்துறை ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்துள்ளது. சுவாசக் கருவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள தீவிரக் கண்காணிப்புப் பிரிவுகளை மருத்துவக் கல்லூரிகளுடன் இணையம் வழி இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

