ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து, கடந்த 16ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் தொடக்கக் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே கிருஷ்ணா மாவட்டம், மடினேபள்ளி பகுதியில் 2 அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பது மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கும் தொடக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் அந்தப் பள்ளிகள் இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. பரிசோதனையில் மேலும் மாணவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டால் பள்ளி தொடர்ந்து மூடப்படும் என்று மாவட்டக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நேற்று தினசரித் தொற்று 1,248ஆக பதிவாகியுள்ளது. இதனுடன் சேர்த்து அங்கு மொத்தம் 20 லட்சத்து 4,590 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,715 பேர் தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன என்று ஆந்திர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை 19,77,163ஆக அதிகரித்துள்ளது. 13,750 பேர் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

