கேரளா: ஒரே நாளில் 31,445 பேர் பாதிப்பு

2 mins read
038ae6e4-06cc-4379-881a-5e5a1df4475a
கேரளாவின் மஞ்சேரி அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மூன்று மாதங்களுக்குப் பின் தொற்றுப்பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் மீண்­டும் கொரோனா தொற்­றுப் பர­வல் அதி­க­ரிக்­கத் தொடங்கி உள்­ளது. சுமார் மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு அம்­மா­நி­லத்­தில் அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை 30 ஆயி­ரத்­தைக் கடந்து பதி­வா­னது.

நேற்று முன்­தி­னம் 31,445 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­உள்­ளதை கேரள சுகா­தா­ரத்­துறை உறுதி செய்­தது. இதன் மூலம் நாட்­டில் பதி­வான மொத்த பாதிப்பு எண்­ணிக்­கை­யில் 68% கேர­ளா­வின் பங்­க­ளிப்­பாக உள்­ளது.

கடந்த திங்­க­ளன்று கேர­ளா­வில் 13,383 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்­பட்­டது. இத­னால் பாதிப்பு குறைந்து வரு­வ­தா­கக் கரு­தப்­பட்ட நிலை­யில், உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்­கை­யும் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் 215 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். இத­னால் மக்­கள் மத்­தி­யில் அச்­சம் கூடி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் மாநி­லம் முழு­வ­தும் மீண்­டும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், அடுத்த நான்கு வாரங்­க­ளுக்கு மக்­கள் மிக­வும் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்­றும் கவ­னக்­கு­றை­வாக அல்­லது அலட்­சி­ய­மாக இருந்­தால் நிலைமை மேலும் மோச­ம­டை­யும் என்­றும் எச்­ச­ரித்­துள்­ளார்.

இந்­திய நில­வ­ரம்

இதற்­கி­டையே இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 46,164ஆக அதி­க­ரித்­துள்­ளது. இரண்டு நாள்களில் மட்­டும் அன்­றா­டம் பாதிக்­­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை 20 ஆயி­ரம் அதி­க­ரித்­துள்­ளது. நேற்று முன்­தினம் 607 பேர் பலி­யாகி­விட்­ட­னர்.

தற்­போது 333,725 பேருக்கு கிரு­மித்­தொற்­றுப் பாதிப்­புக்­காக மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.

மாநில நில­வ­ரம்

மகா­ராஷ்­டி­ரா­வில் புதி­தாக 5,031 பேருக்கு தொற்­றுப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. ஐந்து நாள்­க­ளுக்­குப் பிறகு அன்­றாட பாதிப்பு மீண்­டும் 5 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது. மேலும் 26 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

கர்­நா­ட­கா­வில் கொரோனா மூன்­றா­வது அலை துவங்­கி­விட்­ட­தாக வெளி­வந்த தக­வல் உண்­மை­யல்ல என பெங்­க­ளூரு மாந­க­ராட்சி தெரி­வித்­துள்­ளது. பெங்­க­ளூ­ரு­வில் தொற்­றுப்­ப­ர­வல் கவலை அளிக்­கும் வகை­யில் இல்லை என்று மாந­க­ராட்சி ஆணை­யர் கூறி­யுள்­ளார்.

டெல்­லி­யில் இரட்டை இலக்­கங்­களில் மட்­டுமே அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை பதி­வாகி வரு­கிறது என்­றும் ஆந்­தி­ரா­வில் நிலைமை கட்­டுக்­குள் இருப்­ப­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.