செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
81ee4fb7-7ca0-406d-bccd-910a616f623c
-
Google News Preferred Icon

டெல்லி பல்கலை பாடத்திட்டம்: தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகள் நீக்கம்

புதுடெல்லி: தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த நீக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அப்பல்கலையின் ஆங்கில துறைக்கான பாடப்பிரிவில் இந்தப் படைப்புகள் இடம்பெற்று இருந்தன. "பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பாடத் திட்டத்தில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்," என்று மதுரை எம்பி சு.வெங்டேசன் தெரிவித்துள்ளார்.

3.3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.3 கிலோ தங்கம் கோழிக்கோடு விமான நிலையத்தில் பிடிபட்டது. இது தொடர்பாக மூவர் கைதாகினர். ஒரு பயணியிடம் இருந்து 1,573 கிராம் தங்கமும் மற்றொருவரிடம் இருந்து 162 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஷார்ஜாவில் இருந்து வந்த மற்றொரு பயணி தனது காலணி உறையில் 1,595 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

மைசூரு மேயர் பதவி பாஜக வசமானது

பெங்களூரு: மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை முதன்முறையாக பாஜக கைப்பற்றி உள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்றன. எனினும் மேயராகத் தேர்வு செய்யப்பட்ட மஜத கட்சியின் ருக்மினி மாதே கவுடாவின் பதவி பறிக்கப்பட்டது. இதனால் மேயர் பதவி காலியாகவே, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் இம்முறை மேயர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி முதன்முறையாக மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பாஜக கைப்பற்றியது. அக்கட்சியைச் சேர்ந்த சுனந்தா பாலநேத்ரா மேயராகத் தேர்வானார்.

மத்திய நீர் வளத்துறை அமைச்சர், கர்நாடக முதல்வர் மீண்டும் சந்திப்பு

புதுடெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மீண்டும் சந்தித்துப் பேசி இருப்பது தமிழக அரசுக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக முதல்வர் இந்தச் சந்திப்புக்கு முன்பாக ஆற்றுநீா்ப் பங்கீடு தொடா்பாக கர்நாடக மாநில தலைமை வழக்கறிஞா் பிரபுலிங் நவட்கி தலைமையிலான வழக்கறிஞா்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். எனவே மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவே அவர் மத்திய அமைச்சரை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அணை கட்டுமானப் பணியைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.