அதிக கிருமிப்பரவல் உள்ள கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தினசரித் தொற்று 40,000ஐத் தாண்டியதைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் அந்த மாநிலங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பவங்களின் எண்ணிக்கை இம்மாதத்தின் நடுப்பகுதியில் 25,166க்கு விழுந்தது. ஆயினும், ஓணம் பண்டிகையின் காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு கிருமித்தொற்று வேகமாக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய சம்பவங்களில் 60 விழுக்காடு கேரளாவைச் சேர்ந்தவை.
இந்தியாவில் இன்று புதிதாக 44,658 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் இந்தியாவில் மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களின் எண்ணிக்கை, 32.6 மில்லியன். இந்த எண்ணிக்கை, அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் உள்ளது. இந்தியாவின் கொவிட்-19 மரண எண்ணிக்கை 436, 861ஐ எட்டியுள்ளது.

