புதுடெல்லி: உலகில் மிக அதிகமாக கண்காணிப்பு வசதி கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லியும் மும்பையும் இடம்பெற்றுள்ளன.
'போர்ப்ஸ் இந்தியா' ஊடகம் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஒரு சதுர மைல் பரப்பளவில் அதிகபட்சமாக எத்தனை கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை முக்கியமான அளவுகோலாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் உலகளவில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இந்திய தலைநகர் டெல்லி முதலிடம் பெற்றுள்ளது. அங்கு ஓரு சதுர மைலுக்கு 1,827 கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த லண்டன் நகரில் ஓரு சதுர மைலுக்கு 1,138 கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன.
தமிழகத் தலைநகரான சென்னை, 610 கேமராக்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. நியூயார்க் 14ஆம் இடத்திலும் மற்றொரு இந்திய நகரமான மும்பை 18ஆம் இடத்திலும் உள்ளன.
பல்வேறு உலக நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, டெல்லி முதலிடம் பிடித்திருப்பதற்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிவித்துள்ளார்.
மிகக்குறுகிய காலத்தில் இதை சாதித்த அரசு அதிகாரிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் உலகின் மிகப் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் டெல்லியும் மும்பையும் இடம்பெற்றுள்ளன. டெல்லி 48, மும்பை 50ஆவது இடங்களில் உள்ளன. டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகன் முதலிடம் பிடித்தது.

