பெங்களூரு: 'ஃபேஸ்புக்' மூலம் அறிமுகமாகி தனக்குப் பலவிதமாக தொல்லை கொடுத்து வரும் இளையர் மீது 36 வயதான ராதிகா என்ற பெண் போலிசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அவர், தகவல் தொழில்நுட்ப நிறுவன மேலாளராகப் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் சத்தீஸ்கரைச் சேர்ந்த மணீஷ்குமார் என்பவர் 'ஃபேஸ்புக்' மூலம் ராதிகாவுக்கு அறிமுகமானார். அவருடன் இயல்பாகப் பழகி வந்த நிலையில், திடீரென தம்மை திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதா என்று மணீஷ்குமார் கேட்க, தமக்கு அதில் விருப்பம் இல்லை என மறுத்துள்ளார் ராதிகா.
ஆனால் அதன் பிறகு மணீஷ்குமாரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அவரது பெயரை தனது 'ஃபேஸ்புக்' கணக்கில் இருந்து நீக்கினார். ஆனால் மணீஷ்குமார் அவரை விடுவதாக இல்லை.
ராதிகாவின் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு மோசமான குறுந்தகவல்கள் அனுப்புவது, அவரைப் பற்றி மோசமாக விமர்சிப்பது என்று பலவிதமாக தொல்லை கொடுத்துள்ளார்.
"கடந்த ஒரு மாதமாக வேறோரு முறையிலும் குடைச்சல் தருகிறார் மணீஷ்குமார். தினமும் நான் இருப்பது வீட்டிலா அல்லது அலுவலகத்திலா என்பதை தெரிந்து கொண்டு, என் பெயரில் ஐந்து பீட்சாக்கள் ஆர்டர் செய்கிறார். வீட்டிற்கு நேரடியாக வந்து அவற்றைக் கொடுப்பவரிடம் அதற்குரிய தொகையை செலுத்த வேண்டும். இதனால் நான் வலுக்கட்டாயமாக பணம் செலவிட வேண்டியுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என ராதிகா தமது புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

