புதுடெல்லி: 'குவாட்' அமைப்பு நாடுகள் இடையேயான 'மலபார்' கடற்படை கூட்டுப் போர் பயிற்சி தொடங்கியது.
இந்த ஆண்டு இந்தப் பயிற்சி 'குவாம்' நாட்டு கடற்பகுதியில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
'குவாட்' அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகள் இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் 'மலபார்' கடற்படை கூட்டுப் போர் பயிற்சி நடைபெற்றது. தொடக்கத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் மட்டுமே பயிற்சி மேற்கொண்டன. அதன் பிறகு ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் இணைந்தன.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் 'குவாட்' நாடுகள் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை அமெரிக்கக் கடற்படை செய்கிறது.
நிலத்திலும் நீரிலும் வான் பரப்பிலும் மிகக்கடினமான பயிற்சி மேற்கொள்ள 'குவாட்' நாடுகள் விரும்புவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ஒரு நாட்டின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் மற்ற நாடுகளும் பெற முடியும் என்றும் இது பயனுள்ள பயிற்சியாக அமையும் என்றும் இந்தியக் கடற்படை செய்தித் தொடர்பாளர் விவேக் மத்வால் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் தொடங்கிய மலபார் கடற்படை கூட்டுப் போர் பயிற்சியில் போர் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கேற்கின்றன.
மிகவும் சிக்கலான பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபடுவர் என்றும் கடல்சார் உளவு விமானமும் பயிற்சியில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

