'பெற்றோரை இழந்த குழந்தைகள் தொழிலாளர்களாக மாறக்கூடும்'
புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இல்லையெனில் அவர்களில் பலர் குழந்தை தொழிலாளர்களாக மாறும் ஆபத்துள்ளது என நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். கொரோனா சீற்றத்துக்கு நாடு முழுவதும் இதுவரை ஒரு லட்சம் குழந்தைகள், தங்களின் பெற்றோரில் ஒருவரையேனும் இழந்துள்ளனர் என்றும் 8,161 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபரின் உத்தரப் பிரதேச பயணத்தை விமர்சித்த சமாஜ்வாடி எம்பி
லக்னோ: அதிபர் ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது எதற்கு என்று சமாஜ்வாடி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்காக வந்து செல்வது போன்று அதிபர் ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேசத்துக்கு வருகை தருவதாக சமாஜ்வாடி நாடாளுமன்ற உறுப்பினர் பவன் பாண்டே விமர்சித்துள்ளார். "அதிபர் என்ற முறையில் அவர் எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை உள்ளது. ஆனால் அவரது வருகை உத்தரப் பிரதேசத்தில் அரசியலுக்குப் பயன்படுத்தப்படுவதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அதிபரின் பயணத்தை பிரசாரமாகப் பயன்படுத்துகிறது பாஜக," என்று பவன் பாண்டே மேலும் கூறியுள்ளார்.
தமிழகத்தின் 'காவிரி-குண்டாறு' திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு
பெங்களூரு: தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே மேகதாது அணை பிரச்சினை குறித்து மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை கர்நாடகா அரசு சட்டவிரோதமாகச் செயல்படுத்துவதாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார். எனவே இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்படும் என்று அவர் கூறியுள்ளார். காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிர்த்து கர்நாடகா வழக்கு தொடுப்பது உறுதி என்றும் முதலில் மத்திய அரசிடம் இத்திட்டத்துக்கான எதிர்ப்பை கேரள அரசு பதிவு செய்யும் என்றும் முதல்வர் பசவராஜ் தெரிவித்துள்ளார்.
அரசு: குழந்தைகளுக்கான தடுப்பூசி அக்டோபர் மாதம் தயாராகிவிடும்
புதுடெல்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் மேலும் 44,658 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஒரே நாளில் 496 பேர் பலியாகிவிட்டனர். இதற்கிடையே குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அக்டோபர் மாதம் தயாராகிவிடும் என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் இயன்ற விரைவில் பள்ளிகளை திறக்க இயலும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

