பேங்காக்: கொவிட்-19 பாதிப்பு குறைவதற்கான அறிகுறிகள் தென்படுவதை அடுத்து, அடுத்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த தாய்லாந்து முடிவுசெய்துள்ளது.
அதன்படி, அதிக இடங்களுக்கு பயணம் செய்யவும் உணவகங்கள், கடைத்தொகுதிகளைத் திறக்கவும் அனுமதிக்கப்படும்.
இப்போது அதிகபட்சம் ஐவர் மட்டுமே ஒன்றுகூட முடியும் நிலையில், அவ்வரம்பு 25 பேராக உயர்த்தப்படுகிறது. உள்நாட்டு விமானங்கள் மீண்டும் இயக்கப்படும். கடும் கட்டுப்பாடுகள் நடப்பிலிருக்கும் 29 மாநிலங்களில் பொதுப் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும்.
நாளொன்றுக்கு 20,000 பேர் என்ற அளவிலேயே புதிய பாதிப்புகள் இருந்துவரும் வேளையில், இந்தத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
'கொவிட்-19 உடன் வாழ்வது' என்ற உத்தியை அரசாங்கம் கடந்த வாரம் கோடிகாட்டியிருந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக பிரதமர் தலைமையிலான குழு இந்தத் தளர்வுகளுக்குப் பச்சைக்கொடி காட்டி இருக்கிறது.

