செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b2e943e9-adf1-4f9c-8f85-d7af5d9ae98d
-

கொவிட்-19: 100,000 பேர்க்குமேல் மருத்துவமனையில் சிகிச்சை

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நூறாயிரத்தைத் தாண்டிவிட்டது. கடந்த எட்டு மாதங்களில் இதுவே ஆக அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டு ஜனவரி 6ஆம் தேதி 132,051 கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதே முன்னைய உச்சம். இந்நிலையில், அலபாமா, ஃபுளோரிடா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களில், மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான படுக்கைகளே காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு முகக்கவசம்: மெக்சிகோ நிபுணர்கள் உருவாக்கம்

மெக்சிகோ சிட்டி: கொவிட்-19 கிருமியைச் செயலற்றதாக்கச் செய்யும் திறனுடைய, வெள்ளி, செம்பு நுண்ணடுக்குகளால் ஆன முகக்கவசத்தை உருவாக்கி இருப்பதாக மெக்சிகோ தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மூன்றடுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு முகக்கவசத்திற்கு 'சக்கு' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த முகக்கவசத்தை அதிகபட்சம் பத்து முறை அலசி, மீண்டும் பயன்படுத்தலாம். இப்போதைக்கு, நாளொன்றுக்கு 200 முகக் கவசங்களையே அப்பல்கலைக்கழகம் தயாரித்து வருகிறது.

இராணுவ வெடிமருந்துக் கிடங்கில் வெடிப்பு; ஒன்பது வீரர்கள் மரணம்

நூர் சுல்தான் (கஸக்ஸ்தான்): மத்திய ஆசிய நாடான கஸக்ஸ்தானின் இராணுவ வெடிமருந்துக் கிடங்கில் நேற்று முன்தினம் நிகழ்ந்த வெடிப்பில், ஒன்பது இராணுவ வீரர்களும் தீயணைப்பு வீரர்களும் மாண்டுபோயினர்;

90க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்; மேலும் நால்வரைக் காணவில்லை. பத்து முறை வெடிப்புச் சத்தம் கேட்டதாகக் கூறப்பட்டது. விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப் படவில்லை.

நியூசிலாந்தில் கட்டுப்பாடுகள் நீடிப்பு

வெலிங்டன்: உருமாறிய 'டெல்டா' கொவிட்-19 கிருமி பரவல் காரணமாக, கட்டுப்பாடுகளை நியூசிலாந்து மேலும் நான்கு நாள்களுக்கு நீட்டித்துள்ளது. அதன்பின் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், பள்ளிகளும் தொழில் நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் மேலும் சில காலத்திற்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

விநியோகிப்பாளராக வேலை செய்யும் முன்னாள் ஆப்கானிஸ்தான் அமைச்சர்

லைப்ஸிக் (ஜெர்மனி): ஆப்கானிஸ்தானில் ஈராண்டு காலம் தொடர்பு அமைச்சராகப் பணியாற்றிய சையது சதாத், 49, இப்போது ஜெர்மனியின் லைப்ஸிக் நகரில் சைக்கிள்மூலம் உணவு விநியோகம் செய்யும் பணியைச் செய்து வருகிறார். 2018ஆம் ஆண்டில் அவர் தமது அமைச்சர் பதவியைத் துறந்து, ஜெர்மனிக்குச் சென்றார். தமது வேலை குறித்து தாய்நாட்டில் சிலர் குறைகூறினாலும், அதுபற்றித் தமக்கு எந்தவொரு குற்றவுணர்வும் இல்லை என்றார் திரு சதாத். தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பில் பட்டம் பெற்றுள்ள அவர், பிரிட்டிஷ் குடியுரிமையும் பெற்றுள்ளார்.