புதுடெல்லி: மஸ்கட்டிலிருந்து டாக்காவுக்குப் பறந்துகொண்டிருந்த பங்ளாதேஷ் 'பீமன்' பயணிகள் விமானத்தில் விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் இந்தியாவில் உள்ள நாக்பூரில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
அதில் 126 பயணிகள் இருந்தனர்.
இந்தியா வழியாக சென்றுகொண்டிருந்த விமானம் கோல்கத்தாவை நெருங்கியபோது, விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவசரமாக தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்ட மற்றொரு விமானி கேட்டுக்கொண்டார்.
ஆனால் விமானம் நாக்பூர் அருகே இருந்ததால் நாக்பூர் விமான நிலையத்தில் இறக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
கோல்கத்தா கட்டுப்பாட்டு அறையும் நாக்பூர் விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்தது.
பங்ளாேதஷ் விமானியும் இது தொடர்பாக நாக்பூர் விமான நிலையத்துடன் தொடர்புகொண்டார்.
இதையடுத்து நாக்பூர் விமான நிலையத்தில் அவசரநிலை அறி விக்கப்பட்டு அவசர சிகிச்சை வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
விமானம் எந்தவித பிரச்சினையும் இன்றி பத்திரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
உடனே விமானத்தில் இருந்த விமானி, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
துணை விமானி உரிய நேரத்தில் விமானத்தை நாக்பூரில் தரையிறக்கியதால் 126 பயணிகளும் உயிர் தப்பினர்.
விமானிக்கு நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நாக்பூருக்கு வந்த 'பீமன்' விமானத்தின் அதிகாரிகள், பயணிகளை மாற்று விமானத்தில் பங்ளாதேஷுக்கு அனுப்பி வைத்தனர்.
கொள்ளைநோய் பரவல் காரணமாக 'பீமன்' பங்ளாதேஷ் விமான நிறுவனம், இந்தியாவுக்கான விமானச் சேவையை நிறுத்தியிருந்தது. அண்மையில் அந்நிறுவனம் இந்தியாவுக்கான சேவையைத் தொடங்கியது.

