கவுஹாத்தி: வட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அங்கு பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 133,330 பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 243 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அவற்றை இணைக்கும் சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன. பதினாறு கிராமங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த கனமழைக்கு இதுவரை யாரும் பலியாகவில்லை என அரசுத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழை முடிவுக்கு வரும் வரை மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.

