புதுடெல்லி: கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராகி வருவதாக அதன் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெருந்தொற்று காலத்தில் உயிர்த் தியாகம் செய்த மருத்துவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"அத்தகைய மருத்துவர்களின் பெயர்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். கொரோனாவுக்கு எதிராக மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது.
"கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது," என்றார் சத்யேந்திர ஜெயின்.
டெல்லியில் கடந்த சில தினங்களாக தொற்றுப் பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மற்ற மாநில நிலவரங்கள்:
இதற்கிடையே மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் அன்றாட தொற்று எண்ணிக்கை மீண்டும் ஐந்து ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவானது. ஒரே நாளில் மேலும் 126 பேர் பலியாகிவிட்டனர்.
உயிரிழப்பு விகிதம் 2.12 விழுக்காடாக உள்ளது. தலைநகர் மும்பையில் புதிதாக மேலும் 850 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் 1,229 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. மேலும் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். அங்கு சில பகுதிகளில் மட்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
ஆந்திராவில் மேலும் 1,321 பேருக்கு தொற்று உறுதியானது. புதிதாக 9 பேரை காவு வாங்கியுள்ள
கொரோனா பாதிப்புக்கு அம்மாநிலத்தில் இப்போது 14,853 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. அங்கு நேற்று முன்தினம் ஆறு பேர் பலியாகிவிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 213,122 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3,575 ஆக அதிகரித்துள்ளதாக அரசுத்தரப்பு தெரிவிக்கிறது.

