செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6ab49376-e84d-4a94-8f14-de466dd74f56
-

இணையத்தில் பப்ஜி ஆட்டம்:

ரூ.10 லட்சத்தை இழந்த சிறுவன்

மும்பை: இந்தியாவில் 'பப்ஜி' விளையாட்டுக்குத் தடைவிதிக்கப் பட்டுள்ள போதிலும் பலர் குறுக்கு வழிகளைக் கண்டறிந்து இணையத்தில் இந்த விளையாட்டை ஆடி வருகிறார்கள். அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் இந்த விளையாட்டை ஆடியதுடன், அதற்கான அடையாள அட்டையையும் சில சலுகைகளையும் பெறுவதற்கு தனது தாயாரின் வங்கிக்கணக்கைப் பயன்படுத்தி உள்ளான். கடந்த ஆண்டு முதல் இதுவரை பத்து லட்சம் ரூபாயை சிறுவன் இவ்வாறு இழந்தது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

மம்தா: எங்களுக்கு எதிராக சிபிஐ-யை

பயன்படுத்துகிறது மத்திய அரசு

கோல்கத்தா: நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நேரில் முன்னிலையாகும்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜிக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. முதல்வர் மம்தாவின் மகளுக்கும் இதுபோன்ற அழைப்பாணை வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தங்களுக்கு எதிராக மத்திய அரசு, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

குடியிருப்புப் பகுதியில் தொழிற்சாலை: பாய்லர் வெடித்து ஐவர் பலி

பெங்களூரு: குடியிருப்புப் பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில், பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கி ஐந்து பேர் பலியாகினர். பெங்களூரில் இயங்கி வந்த அந்த உணவுப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதியில் தொழிற்சாலை இயங்க எவ்வாறு அனுமதி கிடைத்தது என்பது குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.

அறிவின் தத்துவத்தை உள்ளடக்கியது சமஸ்கிருதம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: சமஸ்கிருத இலக்கியம் மனிதநேயத்தையும் அறிவின் தெய்வீக தத்துவத்தையும் உள்ளடக்கியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாப்பதும் அதனை புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் நாட்டு மக்களின் கடமை என்றும் அவர் வானொலி வழி நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது குறிப்பிட்டார். "நமது வருங்கால தலைமுறையினருக்கும் நம்முடைய மொழியில் உரிமை உள்ளது. சமஸ்கிருத மொழி அறிவை வளர்க்க உதவுகிறது. தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகிறது," என்றார் பிரதமர் மோடி.