லூதியானா: வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆடவரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து கையெறி குண்டுகள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டன. அவை சீனாவில் தயாரிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் தர்ன் தரன் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் சரூப் சிங் என்ற அந்த ஆடவர் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவரைப் பற்றி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலிசார் அவரைக் கைது செய்தனர்.
இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு வெளிநாட்டில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர் வைத்திருந்த கையெறிக் குண்டுகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட பி-86 வகையைச் சேர்ந்தவை என்றும் அவை சக்தி வாய்ந்தவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சரூப் சிங் சதி வேலைகளுக்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபட அவர் திட்டமிட்டிருந்திருக்கலாம் என்றும் அந்த சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சரூப் சிங் தொடர்பு வைத்திருந்த வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் அவருடன் சம்பந்தப்பட்ட வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
சரூப் சிங்கின் கைது நடவடிக்கையால் அவர் வசித்து வந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

