'ஆப்கானிஸ்தான் நிலையை இந்திய அரசு உன்னிப்பாகக் கவனிக்கிறது'
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலைப் பயன்படுத்தி, எல்லை கடந்த பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சி செய்யும் எந்தவொரு தேச விரோத சக்தியையும் அனுமதிக்கக்கூடாது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
கடல், தரைவழி, வான்வழி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனா உடனான எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
"நாட்டின் எல்லைகள் தொடர்பான அம்சங்களில் எந்தவொரு சமசரத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் இறையாண்மை மீறப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்றார்.
இரண்டு முறை நடைபெற்ற போர்களில் இந்தியாவால் பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டதை நினைவுபடுத்திய அவர், இந்தியாவை போர் மூலம் எதிர்கொள்ள முடியாது என்பதால் பாகிஸ்தான் தரப்பு மறைமுக போரில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் அனைத்து சதிகளையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருவதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
"ஆப்கானிஸ்தானின் தற் போதைய நிலையால் இந்தியாவுக்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்திருப்பது உண்மைதான். எனினும் மத்திய அரசு அங்குள்ள நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இதற்கிடையே, இந்தியாவுடனான கலாசாரம், பொருளாதாரம், அரசியல், வர்த்தகம் சார்ந்த உறவுகளை முன்புபோல் தொடர விரும்புவதாக தலிபான் அமைப்பின் துணைத் தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் கூறியுள்ளார்.
கத்தாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்கானைப் பொறுத்தவரை இந்தியா மிக முக்கியமான நாடு என்றார்.
பாகிஸ்தான் வழியாகவோ அல்லது நேரடி விமானப் போக்குவரத்து வாயிலாகவோ இரு தரப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'துருவ் மார்க்' வகையைச் சேர்ந்த அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள், ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பிடம் இருந்து வாங்குகிறது மத்திய அரசு.
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடியாகும்.

