சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்கு போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மீது போலிசார் நடத்திய தடியடியின்போது ஒருவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் கடந்த பல மாதங்களாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போது மாநில அளவிலும் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், ஹரியானாவில் கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது, போலிசார் விவசாயிகள் மீது திடீர் தடியடி நடத்தினர். அப்போது படுகாயமடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறையின் இந்தச் செயல்பாட்டைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கர்னல் என்ற பகுதியில் ஏராளமான விவசாயிகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலிஸ் மேற்கொண்ட தடியடியின்போது விவசாயி ஒருவர் இறந்தது குறித்து நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இல்லையெனில் செப்டம்பர் 6ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்னன.
இதற்கிடையே, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் அதன் அடிப்படையிலேயே சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.
"போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் மண்டையை உடைக்க வேண்டும் என அதிகாரி ஒருவர் உத்தரவிட்டது தவறுதான். எனினும் சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது அரசின் கடமை என்பதை அனைவரும் உணரவேண்டும்," என முதல்வர் மனோகர் லால் கட்டார் மேலும் தெரிவித்துள்ளார்.

