உத்தரப் பிரதேசத்தில் டெங்கிக்கு 46 பேர் பலி: பாஜக எம்எல்ஏ புகார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெரோஸாபாத் பகுதியில் டெங்கி காய்ச்சல் பரவி வருவதாகவும் அத்தொகுதியில் 46 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அதன் எம்எல்ஏ மணிஷ் அசிஜா கூறியுள்ளார். தனது தொகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது என்றும் நகராட்சியில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்றும் பாஜகவைச் சேர்ந்த அவர் புகார் எழுப்பி உள்ளார். எனினும் எம்எல்ஏ மணிஷ் அசிஜாவின் புகாரை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் மறுத்துள்ளார். இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து வெளியான செய்தி தவறானது என்று அவர் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சி எம்எல்ஏ ஒருவரே அரசைக் குறை கூறியுள்ளார்.
பங்ளாதேஷ் எல்லை வழி ஊடுருவ முயன்ற இருவர் சுட்டுக் கொலை
கோல்கத்தா: பங்ளாதேஷ் எல்லைப் பகுதி வழியே இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற கடத்தல்காரர்கள் இருவரை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். நேற்று முன்தினம் 20 கடத்தல்காரர்கள் ஊடுருவ முயன்றதாகவும் இந்திய வீரர்கள் எச்சரித்ததையும் மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புக் கருதி இந்திய வீரர்கள் சுட்டதில் கடத்தல்காரர்கள் இருவர் உயிரிழந்தனர். இது குறித்து பங்ளாதேஷ் எல்லைப் பகுதியில் இருந்த அந்நாட்டு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் நிலச்சரிவில் ஐவர் பலி
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐந்து பேர் பலியாகி உள்ளனர். பலரைக் காணவில்லை என்றும் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அசாமில் மழை, வெள்ளப்பெருக்கால் 260,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 700 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடுவானில் விமானிக்கு மாரடைப்பு: நாக்பூரில் தரையிறங்கிய விமானம்
மும்பை: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் தலைமை விமானிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மஸ்கட் நகரில் இருந்து பங்ளாதேஷ் தலைநகர் டாக்கா நோக்கிச் சென்ற அந்த விமானத்தின் விமானி மாரடைப்பால் உயிருக்குப் போராடியதை அடுத்து, அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. துணை விமானி விமானத்தை தரையிறக்கியதும் தலைமை விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

