அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: வார வேலை நாட்களை ஐந்தில் இருந்து நான்காகக் குறைக்கவும் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.
வாரத்துக்கு மூன்று நாள் விடுமுறையுடன் பணியாளர்களின் ஊதியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய தொழிலாளர் விதிமுறைகள் வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடப்புக்கு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய ஊதிய விதிகளின் படி ஊழியர்கள் பணிபுரியும் நேரம் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட உள்ளது.
வாரத்திற்கு 48 மணி நேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று நாள் விடுமுறை தரப்பட உள்ளது.
தொழிலாளர் நலனை மத்திய அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. அனைவருக்கும் இலவச மருத்துவப் பரிசோதனை செய்யவும் விதிமுறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிக பட்சம் 240 நாள்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்றிருந்தது. அது தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது.
புதிய ஊதியச் சட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படும். சமூகப் பாதுகாப்புக்காக எல்லா சம்பளப் படிகளிலும் பிஎஃப் இணைக்கப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தும் நான்கு புதிய விதிகள் கடந்த 2019-20ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தப் புதிய விதிகளைக் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போனது. இந்நிலையில், அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

