பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் மின்னல் தாக்குவது அதிகரித்து உள்ளதாகவும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 2,500 பேர் மின்னல் வெட்டி மாண்டுவிடுவதாகவும் அரசாங்கப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 45 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இடியுடன் மழை பெய்யும்போது மின்னல் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும் கால்நடைகளும் இதர பிராணிகளும் அவற்றுக்குப் பலியாவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு அசாம் மாநிலத்தில் கடந்த மே மாதம் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் மாண்டுவிட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சித்தோர்கர் கோட்டையில் மின்னல் வெட்டியதில் ஒரு பகுதி இடிந்து தரையில் விழுந்துவிட்டது.
அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தில் அமர் கோட்டையில் கடந்த ஜூலை மாதம் மின்னல் தாக்கியதில் பலர் மாண்டனர்.
பொதுவாக இந்தியாவில் மின்னல் தாக்குதல் அதிகரித்து இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
மார்ச் மாதம் வரைப்பட்ட 12 மாத காலத்தில் ஏறத்தாழ 19 மில்லியன் முறை மின்னல் தாக்கி இருப்பதாகவும் இது அதற்கு முந்தைய ஆண்டைவிட மூன்றில் ஒரு பங்கு அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் வெப்பநிலை அதிகரித்து வருவதே இதற்கான காரணம் என்று 'இந்திய மின்னல் மீள்திறன் இயக்கம்' என்ற ஓர் இயக்கத்தைச் சேர்ந்த சஞ்சை ஸ்ரீவஸ்தவா என்ற வல்லுநர் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தாலும் ஓர் இடத்தின் நிலம் வெப்பமடைவதாலும் காற்றில் ஈரப்பதம் கூடுவதாலும் திடீரென பெரும் மின்னல் தாக்கும் நிலை ஏற்படுகிறது என்று அவர் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது. நகரப் பகுதிகளிலும் மின்னல் தாக்கும் சம்பவம் அதிகமாகி வருவதாகக் கணிக்கப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயருகிறது, வெப்ப அலை அதிகரிக்கிறது, இதர பல தொடர் விளைவுகளும் ஏற்படுகின்றன. 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவிற்கு இவற்றின் காரணமாக மின்னல் மிரட்டல் அதிகரித்து இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இடி, மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய மரணங்களில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்துவிடலாம் என்று அவர் தெரிவித்தார். கட்டடங்களில் இடிதாங்கிகளைப் பொருத்த வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

