ஸ்ரீநகர்: காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான சையது அலி ஷா கிலானி தமது 92வது வயதில் புதன்கிழமை காலமானார்.
கிலானிக்குப் பொது இறுதிச் சடங்கு நடத்த அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கைகலப்பு மூண்டதாகத் தகவல்கள் கூறின.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான இந்திய பாதுகாப்புப் படைவீரர்கள் காஷ்மீர் முழுவதும் முடக்கத்தை அமல்படுத்தினர்.
பிரிவினைவாதத் தலைவர் கிலானி மரணத்தை அடுத்து காஷ்மீரில் இணையச் சேவைகளும் கை பேசிச் சேவைகளும் துண்டிக்கப்பட்டன. இந்தத் தடை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரில் வியாழக்கிழமை பின்நேரத்தில் அரசு தரப்புக்கும் குடிமக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான போலிசாரும் துருப்புகளும் சாலைகளில் தடுப்புகளை அமைத்து பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவிடாமல் தடுத்தனர்; சுற்றுக்காவலில் ஈடுபட்டனர்.
கற்களை வீசி எறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

