ஆட்டோ ஓட்டும் எட்டு வயது சிறுவன்: உதவிக்கரம் நீட்டிய சந்திரபாபு மகன்
அமராவதி: ஆந்திராவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் கோபாலின் பெற்றோர் இருவரும் பார்வையற்றவர்கள். தன்னையும் இரு சகோதரர்களையும் வளர்க்க பெற்றோர் படும் சிரமங்களைக் கண்டு கவலை அடைந்த இச்சிறுவன் படிப்பைக் கைவிட்டு தந்தைக்குப் பதிலாக அவரது 'பேட்டரி' ஆட்டோவில் மளிகைப் பொருள்களை ஏற்றிச் சென்று ஊர் ஊராக விற்று வந்துள்ளான். துணைக்குப் பெற்றோரும் செல்கின்றனர். சிறுவனின் நிலை குறித்து அறிந்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், சிறுவன் கோபாலை அழைத்து குடும்பச் செலவுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் தருவதுடன், ஆட்டோ கடனை தீர்த்து கோபாலின் கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்
பெங்களூரு: பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது ஆகிய செயல்களில் ஈடுபட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், பொது இடங்களில் குப்பை போடுவோருக்கு ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையர், பொது இடங்களில் எச்சில் துப்புவதால் பலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்படக்கூடும் எனக் கூறியுள்ளார். எச்சில் துப்புவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
நவீன கைபேசியை லஞ்சமாகப் பெற்ற சிபிஐ உதவி ஆய்வாளர் கைது
மும்பை: மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மது விடுதி உரிமையாளர்களை அச்சுறுத்தியது தொடர்பான வழக்கின் விசாரணை ஆவணங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன. இந்நிலையில், அனில் தேஷ்முக்கின் வழக்கறிஞரிடம் இருந்து, இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் உதவி ஆய்வாளர் அபிஷேக் என்பவர், 'ஆப்பிள் ஐபோன்-12' ரக நவீன கைபேசியை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ஆவணங்களைக் கசியவிட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வழக்கறிஞரும் உதவி ஆய்வாளரும் கைதாகினர்.
முகேஷ் அம்பானியைக் கொல்ல முயற்சி: குற்றப்பத்திரிகை தாக்கல்
மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி உள்ள பத்து பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒன்பதாயிரம் பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வாஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. மும்பையில் வசிக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகே வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டிருந்ததை அடுத்து, அவரைக் கொலை செய்ய சதி நடப்பது தெரிய வந்தது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
இணைய வழி சூதாட்டத்துக்குத் தடை விதிக்க கர்நாடக அரசு முடிவு
பெங்களூரு: கர்நாடகாவில் இணையம் வழி நடைபெறும் அனைத்து வகை சூதாட்டங்களுக்கும் தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் இது தொர்பான மசோதா மிக விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுவேந்து அதிகாரியிடம் விசாரணை
கோல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு அதிகாரியான சுப்ரதா சக்ரவர்த்தி கடந்த 2018ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு கோல்கத்தா சிஐடி பிரிவு போலிசார் அழைப்பாணை அனுப்பி உள்ளனர். முதல்வர் மம்தா பானர்ஜி மருமகன் மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதால் சுவேந்து அதிகாரி மீது ஆளும் தரப்பு பொய் வழக்கு பதிவு செய்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

