தங்கத்தின் விலை குறைந்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதம் இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு இருமடங்காக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து பல பண்டிகைகள் வருவதால் இந்தியச் சந்தையில் தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 63 டன் தங்கத்தை இறக்குமதி செய்த இந்தியா, இவ்வாண்டு அதே காலகட்டத்தில் 121 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, உள்நாட்டுச் சந்தையில் பத்து கிராம் தங்கம் 45,662 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் இதுவே ஆகக்குறைவான விலையாகும்.
செப்டம்பர் மாதம் இந்தியா 80 டன் தங்கத்தை இறக்குமதி செய்யும் என சந்தை நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தியா 12 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருந்தது.
கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடி காரணமாக தங்கத்தின் இறக்குமதி குறைந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

