திருவனந்தபுரம்: ஆஸ்ட்ராஸெனகா கொவிட்-19 தடுப்பூசியின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியை இரண்டாம் முறை செலுத்துவதற்கான கால அவகாசம் நான்கு வாரங்களாகக் குறைக்கப்பட வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் மத்திய சுகாதார அமைச்சிடம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில உயா் நீதிமன்ற நீதிபதி பி.பி. சுரேஷ் குமாா் கூறுகையில், "கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் தவணைகளுக்கான கால இடைவெளி 84 நாள்களாக உள்ளது. ஆனால், வெளிநாடு செல்ல விரும்புவோா் முன்னதாகவே இரண்டாவது தவணையை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
"வெளிநாடு செல்லும் அனைவரும் அங்கேயே நிரந்தரமாக குடியேறுபவா்கள் அல்லர். வேலை முடிந்தவுடன் பெரும்பாலானோா் இந்தியாவுக்குத் திரும்பிவிடுவா்.
"இந்த நிலையில், உள்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடா்பான காரணங்களினால் இரண்டாவது தவணை தடுப்பூசியை முன்கூட்டியே போட்டுக்கொள்ள விரும்புவோருக்கு அதே சலுகையை நீட்டிக்க முடியாது என்று சொல்வதற்கு எந்த அடிப்படையான காரணங்களும் இல்லை.
"எனவே, இரண்டாவது தடுப்பூசியை முன்கூட்டி போட்டுக்கொள்ள விரும்புவோா் 4 வாரங்களுக்குப் பிறகு அதனை எடுத்துக் கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"அதற்குத் தகுந்தாற்போல் 'கோவின்' வலைத்தளத்தில் கால அட்டவணையில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும்," என்றார் அவா்.
3வது முறை ஒரே நாளில் 10 மி. தடுப்பூசி
திங்கட்கிழமை ஒரே நாளில் 10 மில்லியன் (1.13 கோடி) பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று கூறியது. அன்றைய தினம் 1,13,53,571 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதன் மூலம் கடந்த 11 நாள்களில் மூன்றாவது முறையாக ஒரே நாளில் பத்து மில்லியன் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்ட சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

