கவுகாத்தி: அசாம் மாநிலம், ஜோர்ஹட் மாவட்டத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் இரண்டு பயணிகள் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்தன.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து காரணமாக ஏராளமானோர் படகில் இருந்து தண்ணீரில் விழுந்தனர். விழுந்த உடன் பலரும் போராடி மற்ற படகுகளைப் பிடித்துக் கொண்டு கரையேறினார்கள்.
இந்த விபத்தில் 100க்கும் மேற் பட்டோர் காணாமல் போய்விட்ட தாக ஆரம்பக் கட்ட தகவல்கள் கூறிய நிலையில், தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்புப் பணியின் வழி இதுவரை 87 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் உயிரிழந்துள்ளார். காயம் அடைந்தவர்கள் பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் சிலரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அசாமின் உள்நாட்டு நீர் போக்குவரத்து துறை யைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் பணியில் அலட்சியமாக இருந்ததன் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகளை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டுவிட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே தேசிய, அசாம் மாநில பேரிடர் மீட்புப்படையினர் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்திய இராணு வமும் மீட்புப்பணிகளில் நேற்று களமிறங்கியது.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, விபத்து நடந்த இடத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, மீட்புப் பணியை துரிதப்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவ அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஒரு குழந்தை உட்பட 87 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாயமானவர்களை உயிருடன் மீட்பதற்கு உறவினர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். ஒரு பெண் தனது கணவரை நினைத்து அழுகிறார்.
படம்: ஊடகம்