புதுடெல்லி: நம்பத்தகுந்த செய்திகளை வெளியிடுவதில் அச்சு ஊடகங்கள் முன்னிலை வகிப்பதாகவும் செய்தித்தாள்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு அதிக பலன் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
'ஹவாஸ் மீடியா குரூப் இந்தியா' என்ற நிறுவனம் அண்மையில் அந்தக் கருத்துக்கணிப்பை நடத்தியது. பல்வேறு தரப்பினரிடம் திரட்டப்பட்ட கருத்துகள் அறிக்கையாக வெளியிடப்பட்டன.
"கொரோனா கிருமித்தொற்று பரவல் காலத்தில் இருந்து வாசகர்கள் செய்தித்தாள் படிக்கும் நேரம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 41-50 வயது வரையிலான வாசகர்கள் அதிக நேரம் நாளிதழ்களை வாசிக்கின்றனர்.
"நாளிதழ்கள் மீதான வாசகர்களின் எதிர்பார்ப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக மட்டும் நாளிதழ்களை வாசிப்பது என்ற நிலை மாறி அறிவை வளர்த்துக்கொள்வது, நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வது, மொழிப் புலமையை வளர்த்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் நாளிதழ்களைப் படிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
"பொதுவான செய்திகளுக்கு அடுத்தபடியாக அறிவியல்-தொழில்நுட்பம், அனைத்துலக விவகாரங்கள், சுகாதாரம் போன்றவை குறித்த செய்திகள் அதிகம் வாசிக்கப்படுகின்றன.
"அச்சு ஊடகங்கள் வாயிலாக மட்டுமே நம்பத்தகுந்த செய்திகளை தெரிந்துகொள்ள முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். அதேபோல அச்சு ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
"குறிப்பிட்ட 'பிராண்ட்' மீதான நம்பகத்தன்மை, விலை மற்றும் நம்பிக்கை ஆகியவை அச்சு விளம்பரங்களில் பலமடங்கு அதிகமாக உள்ளன. வெறும் 10% வாசகர்கள் மட்டுமே விளம்பரங்களைத் தவிர்க்கின்றனர்," என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

