மும்பை: மகாராஷ்டிராவில் மும்பை அருகே சகினகா புறநகர் பகுதியில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் டெம்போ வாகனத்திற்குள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் நேற்று உயிரிழந்த தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொடூரத்தனம் புரிந்த ஆடவரின் பெயர் மோகன் சௌகான் என அடையாளம் காணப்பட்டது.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே மோகன் செளகான் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "வெள்ளிக்கிழமை காலை, சாலை ஓரம் பெண்ணை ஆண் ஒருவர் தாக்குவதாகக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
"இதையடுத்து, சம்பவ இடத் திற்குச் சென்றபோது ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் கிடந்தார். அந்தப் பெண்ணை ராஜவாதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். முதற்கட்ட விசாரணையில், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இரும்புத் தடியால் பிறப்புறுப்பு உள்ளிட்ட பாகங்களில் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
சாலை அருகே நின்றுகொண்டிருந்த டெம்போ வாகனத்திற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது. வாகனம் முழுவதும் ரத்த கறை படிந்திருந்தது," என்றார்.
கொலை, பாலியல் வன்புணர்வு என பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்ற வாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நடைபெற்றதைப் போல இந்தக் கொடூரச் சம்பவமும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

