வாய்க்குள் சுமார் 1 கிலோ தங்கம்
புதுடெல்லி: துபாயிலிருந்து டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய இரு ஆடவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அந்த ஆடவர்கள் இருவரும் தங்களது வாய்க்குள் பற்களோடு சேர்த்து ஒட்டி 951 கிராம் தங்கத்தையும் தங்கச் சங்கிலி ஒன்றையும் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலிசார் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
குற்றவாளிகளுக்கு வாய்ப்பில்லை
லக்னோ: புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மாஃபியா கும்பல் தலைவர் முக்தர் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவாக இருக்கிறார். அவர் பஞ்சாப் மாநிலம் பாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அக்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2022 தொடக்கத் தில் நடக்கவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்த லில், குற்றப்பின்னணி கொண்ட யாரும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப் படமாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
தங்கம் வென்றவருக்கு கௌரவம்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், தோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். போட்டிகள் நிறைவுற்ற நிலையில் வெள்ளிக்கிழமை சொந்த ஊர் திரும்பிய பிரமோத் பகத்திற்கு புவனேஸ்வர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மாநில அரசின் சார்பில் ரூ.6 கோடி வெகுமதி அளிக்கப்படும் என மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மாநில அரசில் அதிகாரி அந்தஸ்தில் பகத்துக்கு வேலையும் அளிக்கப்பட்டுள்ளது.
கொண்டாட்டத்தில் கொரோனா
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப் பட்டது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தொடர் கொண்டாட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் தடுப்பூசி பிரசாரம் இணைக்கப்பட்டிருந்தது. இதேபோல தடுப்பூசி பிரசாரத்துடன் கூடிய விநாயகர் சிலைகள் பல நகரங்களில் வைக்கப்பட்டிருந்தன. (படம்: ஏஎஃப்பி)

