புதுடெல்லி: 21ஆம் நூற்றாண்டில் இந்தியா மிகவும் வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக அனைத்துலக அரங்கில் திகழ்கிறது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாகவும் இந்த மீட்சியானது வலுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார்தாம் பவன் அரங்கை காணொளி நிகழ்வின் வழி திறந்து வைத்துப் பேசிய அவர், புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்களுக்கு அந்த அரங்கில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.
இந்தியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் அண்மையில் நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 20.1 விழுக்காடு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது என்றார்.
இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டப்பட்ட வளர்ச்சியை விட அதிகம் என்றும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 'மைனஸ்' 24.4 விழுக்காடாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரமும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்ட வேளையிலும், இந்தியாவில் மட்டும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
"இந்தியாவில் மட்டும்தான் உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. இது பல புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை பத்து துறைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி, வாகனம் உள்ளிட்ட தொழில்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொற்றுப் பரவல் பாதிப்பிற்குப் பிறகு இத்துறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன," என்றார் பிரதமர் மோடி.
ஏனைய உலக நாடுகளைப் போலவே இந்தியப் பொருளாதாரமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், சேதங்களைக் காட்டிலும் நாடு வேகமாக மீண்டுள்ளது என்றார்.பெருந்தொற்று மேலாண்மை தொடர்பிலான அனுபவங்கள், தடுப்பூசி நடவடிக்கையை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் மூன்றாவது அலை ஏற்பட்டாலும் பொருளியல் மீட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மோடி.
'கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன'

