புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பதின்ம வயதினருக்கு அக்டோபர் முதல் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சைடஸ் கெடிலா நிறுவனம் இந்தப் பிரிவினருக்கான ஊசியில்லா மருந்தை உற்பத்தி செய்துள்ளது.
'ஸைகோவ்-டி' என்று குறிப்பிடப்படும் இந்த மருந்து மூன்று தவணைகளாகப் போடப்பட வேண்டும். மேலும், இதை உடலுக்குள் செலுத்த ஊசி தேவையில்லை.
முதல் தவணைக்குப் பிறகு 28 நாள்களில் இரண்டாவது, 56ஆவது நாளில் மூன்றாவது தவணையாக இந்த மருந்து உடலில் செலுத்தப்படும். நமது உடலின் தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் எனப்படும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இந்த மருந்து செலுத்தப்படுகிறது.
அவசரகால பயன்பாட்டுக்கு 'ஸைகோவ்-டி' மருந்தைப் பயன்படுத்த கடந்த மாதம் 20ஆம் தேதி இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருந்தது. கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் பிளாஸ்மா-மரபணு மருந்து 'ஸைகோவ்-டி' தான்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, சைடஸ் கெடிலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷர்வில் படேல், இம்மாதமே மருந்து விநியோகம் தொடங்கிவிடும் என்றும் முதற்கட்டமாக மாதந்தோறும் நூறு மில்லியன் 'ஸைகோவ்-டி' மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் இந்த எண்ணிக்கையை மாதந்தோறும் ஐநூறு மில்லியனாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக சைடஸ் கெடிலா நிறுவனம் கூறியுள்ளது.

