செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
c8510c06-9f5b-4ee9-975b-486857806207
-

ஆய்வு: 93 மில்லியன் விவசாயிகளில் சரிபாதிப் பேர் கடன் வாங்கி தத்தளிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நிலவரத்தின்படி மொத்தம் 93 மில்லியன் விவசாய குடும்பங்கள் உள்ளன என்றும் அவற்றுள் சரிபாதிக் குடும்பங்கள் கடனில் தத்தளித்து வருவதாகவும் தேசிய புள்ளியியல் துறையின் அண்மைய ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது. 2018-19 வேளாண் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் சராசரியாக ரூ.10,218 ஆக இருந்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கும் சராசரியாக ரூ.74,121 கடன் உள்ளது. மொத்த கடனில் சரிபாதி தொகையானது விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், இதர காரணங்களுக்காகவும் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இருபது விழுக்காட்டினர் உள்ளூர் வட்டிக்காரர்களிடம் கடன் பெற்றுள்ளனர் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்

அகமதாபாத்: முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி விலகியதை அடுத்து, குஜராத் மாநில சட்டப்பேரவை பாஜக தலைவராக பூபேந்திர படேல் தேர்வானார். நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மேலிடப் பார்வையாளர்களாக நரேந்திர சிங் தோமர், தருண் சக் பங்கேற்றனர். கூட்டம் முடிவடைந்த பின்னர், பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டிருப்பதை நரேந்திர சிங் தோமர் உறுதி செய்தார். குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வரை மாற்றியுள்ளது பாஜக தலைமை.

டெல்லியில் 77 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக மழை பதிவானது

புதுடெல்லி: வடஇந்திய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லியில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 1139 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1975ஆம் ஆண்டு 1155 மில்லிமீட்டர் மழை பெய்ததே அதிக அளவு மழைப்பொழிவாகப் பதிவாகி உள்ளது. மேலும் டெல்லியில் சுமார் 77 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மாதத்தில் 38.3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிதி நிறுவனத்தில் புகுந்து பட்டப்பகலில் 12 கிலோ தங்க நகைகள் கொள்ளை

கோல்கத்தா: தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பட்டப்பக லில் பல கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பசிம் பிரெட்ஹமன் மாவட்டத்தில் இயங்கி வரும் அந்நிறுவனத்திற்குள் நேற்று முன்தினம் காலை திடீரென நான்கு கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய அக்கும்பல், பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.8 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகளையும் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்தது.

இளம் தடகள வீராங்கனை படுகொலை

லக்னோ: 'கோகோ' விளையாட்டில் தேசிய அணிக்காக விளையாடி வரும் 24 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதுடன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். பிஜினோர் பகுதி ரயில் நிலையம் அருகே அவரது உயிரற்ற உடல், ரயில் தண்டவாளத்தின் மீது கிடந்தது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளம் வீராங்கனை, அரசுப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனியார் பள்ளியில் நேர்முகத் தேர்வுக்காக சென்ற அவர் பல மணி நேரம் கழிந்த பிறகும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவரது உடல் ரயில் தண்டவாளத்தின் மீது கிடப்பதாக தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்றதாக இளம் வீராங்கனையின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். தனது தங்கை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக அவரது மூத்த சகோதரி கூறுகிறார். ஆனால் போலிஸ் தரப்பில் அவ் வீராங்கனை கொலை செய்யப்பட்டது மட்டுமே உண்மை என்றும் வேறு குற்றங்கள் நடந்ததாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.