கொரோனாவும் கடந்து செல்லட்டும்: பாலிவுட் திரைப்படத் தயாரிப்பில் $182 மி. ஒப்பந்தம் கையெழுத்து

கொரோனாவும் கடந்து செல்லட்டும்: பாலிவுட் திரைப்படத் தயாரிப்பில் $182 மி. ஒப்பந்தம் கையெழுத்து

1 mins read
beb1fb94-8409-439e-8ad9-be8363bf0d43
படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் இரு மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ.10 பில்லியன் (S$182 மில்லியன்) மதிப்பிலான திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்டுவரும் வேளையில் ஒப்பந்தத்தில் அந்த நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

அனில் அம்பானியின் ரிலயன்ஸ் எண்டர்டெய்ன்மண்ட், டி-சிரிஸ் ஆகிய அவ்விரு நிறுவனங்கள் அடுத்த மூன்றாண்டுகளில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இணைந்து தயாரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இவற்றில் சில திரைப்படங்கள் அடுத்த ஆண்டுவாக்கில் வெளியிடப்படலாம் என்று அந்நிறுவனங்கள் கூறின.

இந்திய திரைப்படத் தயாரிப்பு வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தங்களில் இது அடங்கும் எனக் கூறப்படுகிறது.

பெருந்தொற்றுக் காலத்தில், திரையரங்குகளில் படங்களை வெளியிடுவதைக் கைவிட்டு அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற 'ஓடிடி' தளங்களுக்கு பல்வேறு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளது. இத்தகைய சூழலில், திரையரங்குகளைத் தளமாகக் கொண்டு இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது துணிச்சலான செயல் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டிலிருந்தே தயார்நிலையில் உள்ள மாபெரும் திரைப்படங்கள் பலவற்றை வெளியிடுவதை ரிலயன்ஸ் எண்டர்டெய்ன்மண்ட், டி-சிரிஸ் ஆகிய நிறுவனங்கள் ஒத்திவைத்துள்ளன. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு அவை காத்திருந்தன.

குறிப்புச் சொற்கள்