புதுடெல்லி: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழங்கால் அளவு தேங்கியிருந்த மழை நீரில் நின்றபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி மாநில எல்லையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத் தலைமையேற்றார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முதலில் ராகேஷ் மழை நீரில் நின்று முழக்கமிட, பின்னர் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.
கடந்த பல மாதங்களாக டெல்லி, உத்தரப் பிரதேச மாநில எல்லையில் ஏராளமான விவசாயிகள் கூடாரங்கள் அமைத்து தங்கி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கனமழையால் விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்கள், தற்காலிக தங்குமிடங்கள் சேதம் அடைந்துள்ளன.
விவசாய சங்கங்களின் செய்தித் தொடர்பாளர் தர்மேந்திரா மாலிக், வெள்ளம் சூழ்ந்தாலும் விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்றார்.
"மழை நீரை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். அவர்கள் எதையும் பொருட்படுத்தவில்லை. போராட்டம் நடத்தத் தொடங்கிய பின்னர் குளிர், வெயில், மழை என மூன்று பருவ நிலைகளையும் பார்த்துவிட்டோம்.
"எனவே, இனி எதைக் கண்டும் விவசாயிகள் அஞ்சப் போவதில்லை," என்றார் தர்மேந்திரா மாலிக்.

