செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
99d76137-d90e-40ff-9acd-52f7f4a9099b
-

சுவிஸ் வங்கிக் கணக்கு: இந்தியர்களின் விவரங்கள் இம்மாதம் ஒப்படைப்பு

புதுடெல்லி: சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. இம்மாதம் அளிக்கப்படுவது மூன்றாவது பட்டியல் என்றும் முதன் முறையாக சொத்துச் சந்தை, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

புவனேஸ்வர்: ஒடிசாவில் நீடித்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை மேலும் நீடிக்கும் என்பதால் அங்கு ஏழு மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த அடைமழைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உள்பட நால்வர் பலியாகினர்.

பத்து விழுக்காடு பொருளியல் வளர்ச்சி

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 20.1 விழுக்காடாக உள்ளது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக பத்து விழுக்காடு அளவுக்குப் பொருளியல் வளர்ச்சி இருக்கும் என பொருளாதார விவகாரம் சார்ந்த ஆய்வு மையமான என்சிஏஇஆர் இயக்குநர் ஜெனரல் பூணம் குப்தா தெரிவித்துள்ளார். இதே வேளையில், அடுத்து வரும் ஆண்டுகளில் எட்டு விழுக்காடு வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வது பெரும் சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏழு பேரை கைது செய்த சிபிஐ

கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று முன்தினம் மேலும் ஏழு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ள சிபிஐ, குச்பிஹார் உள்ளிட்ட இடங்களில் நடந்த படுகொலைகள் தொடர்பாக ஏழு பேரை கைது செய்தது. இதன்மூலம், இந்த வன்முறைகள் தொடர்பாக சிபிஐ கைது செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வன்முறை தொடர்பாக கைதானோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.