பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை
புதுடெல்லி: இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி, நாட்டில் ஒன்று முதல் பத்து வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக தேசிய கொரோனா அவசர நிலை உத்திவகுப்புப் பணிக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம், நாட்டில் பதிவான மொத்த தொற்றுகளில் குழந்தைகள் பாதிப்பு விகிதமானது 2.80% ஆக இருந்தது என்றும், ஆகஸ்ட் மாதம் இது 7.04% ஆக அதிகரித்துள்ளது என்றும் அக்குழு சுட்டிக்காட்டி் உள்ளது. அதாவது 100 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அதில் ஏழு குழந்தைகளும் அடங்குவர். எனவே பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பிறந்தது பெண் குழந்தை: இலவசமாக பானிபூரி வழங்கிய வியாபாரி
போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பானிபுரி வியாபாரியான அஞ்சல் குப்தா (28 வயது) கடந்த மாதம் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், ஐம்பது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பானிபூரியை இலவசமாக விநியோகம் செய்து மகளின் பிறப்பைக் கொண்டாடி உள்ளார். "பெண் குழந்தையால் பொருளாதாரச் சுமை ஏற்படும் என்று உறவினர்கள் கூறினர். பிறப்பில் ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது. அதனால்தான் மகளின் பிறப்பைக் கொண்டாடினேன்," என்று அஞ்சல் குப்தா தெரிவித்துள்ளார்.
வங்கிக்கடன் மோசடி: சிறையில் உள்ள ராஜீவ் சக்சேனா மீண்டும் கைது
புதுடெல்லி: பல ஆண்டுகளுக்கு முன்பு ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கிய சிக்கிய இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா, கடந்த 2019ஆம் ஆண்டு துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வங்கிக்கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. விசாரணையின் முடிவில், அவர் இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் போராட வேண்டாம்: விவசாயிகளுக்கு முதல்வர் கோரிக்கை
சண்டிகர்: வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் டெல்லி, ஹரியானா எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றும் பஞ்சாப்பில் போராட வேண்டாம் என்றும் அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். பஞ்சாப்பில் 113 இடங்களில் போராட்டங்கள் நடத்துவதால் மாநில பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் விவசாயிகளைத் தூண்டிவிடுவதாக ஹரியானா அரசு சாடியுள்ளது.

