சலவை இயந்திரத்தில் நல்லபாம்பு
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவரின் வீட்டில் சலவை இயந்திரத்தில் ஒரு நல்ல பாம்பு தலைகாட்டிய காணொளி இப்போது இணையத்தில் வலம் வருகிறது. கடைசியில் பாம்பு பிடிக்கும் வல்லுநரை வரவழைத்து பாம்பைப் பிடித்து அதை காட்டுப் பகுதிக்கு கொண்டுவிட்டனர்.
இது பற்றி கருத்து தெரிவித்த ஸ்ரீநிவாஸ், தன்னைப் போல் நகரத்தில் வசிப்பவராக இருந்தாலும் எல்லாருமே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றார். படம்: இந்திய ஊடகம்
வீரியமிகு கிருமி இல்லை
புதுடெல்லி: உருமாறிய கொவிட்-19 டெல்டா கிருமிக்குப் பிறகு மிக வீரியமிக்க உருமாற்ற வகை கிருமியாக பட்டியலிடப்பட்டுள்ள மு.சி.1.2 வகை கிருமி இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என இந்திய சார்ஸ் கிருமி மரபணுக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் 431 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியானதாகவும் ஒட்டு மொத்த உயிரிழப்பு 443,928 என்றளவில் உள்ளது என்றும் மத்திய சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது.
ஏர் இந்தியாவை வாங்க முயற்சி
புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங்கும் தனிப்பட்ட முறையில் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் பெரும் இழப்பில் இயங்கி வரும் நிலையில் அதை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்தியா பரிசீலிக்கிறது
புதுடெல்லி: இந்தியாவிடம் உள்ள ஏவுகணைகளைக் கட்டுப்படுத்தி நிலைநாட்டி வரும் அதிகார ஆற்றலுடன் கூடிய எரிபடைப் பிரிவு ஒன்றை உருவாக்குவது பற்றி இந்தியா ஆராய்ந்து வருகிறது. இந்திய ராணுவத்தின் கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது இதனை தெரிவித்தார்.
சீனாவின் ஆக்கிரமிப்பு சாத்தியம் உள்ளிட்ட பல்வேறு தேசிய பாதுகாப்புச் சவால்களைச் சமாளிக்க அனுகூல மான தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் கூறினார்.
ஆக பழமையான சுறா பற்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ஜெய்ப்பூர் மேற்கு மண்டலத்தில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மீன்கள் ஜுரசிக் மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் கடல், நதிகளில் பெரும்பாலும் காணப்பட்ட மீன் வகை ஆகும் என்று இவற்றைக் கண்டுபிடித்துள்ள அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இவை முழுவதுமாக அழிந்தன.
இந்தக் கண்டுபிடிப்பு, ஜுரசிக் காலத்தைச் சேர்ந்த முதுகெலும்புடைய புதைப்படிவங்கள் குறித்த ஆய்வில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

