புதுடெல்லி: இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதன் விளைவாக உள்ளூர் விமானப் பயணம் வேகமெடுத்து உள்ளது.
உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை ஜூலை மாதத்தைக் காட்டிலும் ஆகஸ்ட் மாதம் 33.83 விழுக்காடு அதிகரித்ததாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட்டில் மட்டும் 67.01 லட்சம் பேர் உள்நாட்டு விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தி உள்ளனர். ஜூலையில் அந்த எண்ணிக்கை 50.07 லட்சமாக இருந்தது. மே மாதம் உள்ளூர் விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஆகக் குறைவாக 21.15 லட்சமாக இருந்தது. கொரோனா கிருமிப் பரவல் இரண்டாம் அலை உருவெடுத்ததே அந்த மாதத்தில் பயணிகள் எண்ணிக்கைச் சரிந்ததற்குக் காரணம் என இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத உள்ளூர் விமானப் பயணச் சேவையில் இண்டிகோ நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. அந்நிறுவனத்தின் விமானங்களில் 38.16 லட்சம் பேர் பயணம் செய்தனர். உள்ளூர் விமானப் பயணச் சந்தையில் இது 57 விழுக்காடு.
இதற்கு அடுத்தபடியாக, ஏர் இந்தியா விமானங்களில் 8.86 லட்சம் பேரும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் 5.84 பேரும் பயணம் செய்தனர்.
எஞ்சிய எண்ணிக்கையை கோ ஃபர்ஸ்ட், விஸ்தாரா மற்றும் ஏர்
ஏஷியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் பகிர்ந்துகொண்டன.
ஆகஸ்ட் மாதம் அதிக பயணி
களுடன் பறந்த விமானங்களைப் பற்றிய விவரமும் வெளியிடப்பட்டு உள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் மொத்த இருக்கை எண்ணிக்கையில் 79.6 விழுக்காடு நிரம்பியது.
இதற்கு அடுத்து இண்டிகோ விமானங்களில் 74%, விஸ்தாரா விமானங்களில் 71.3%, ஏர் இந்தியா 68.4% என்ற அளவில் இருக்கைகள் நிரம்பியதாக இயக்குநரகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
உள்ளூர் விமானப் பயணம் அதிகரித்ததாக செய்தி வெளியான நிலையில் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்களின் பங்குகள் அதிகமாக உயர்ந்தன.
கட்டுப்பாடு தளர்வால் உள்ளூர் விமானங்களில் 67 லட்சம் பயணிகள்

