செய்திக்கொத்து

2 mins read
2113e8d3-383d-45d3-9ad3-e04a17199c47
-

சிறார் திருமணங்கள் 50% கூடின

புதுடெல்லி: இந்தியாவில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டில் சிறார் திருமணக் குற்றங்கள் 50% அதிகரித்து இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சிறார் திருமணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்தாண்டில் 785 வழக்குகள் பதியப்பட்டன. கர்நாடகாவில்தான் அதிகபட்சமாக 184 சிறார் திருமணக் குற்றங்கள் பதிவாகி உள்ளன. 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ள அசாம், மேற்கு வங்கத்தில் முறையே 138, 98 சிறார் திருமண வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 77 வழக்குகள் பதிவாயின.

செல்லப்பனுக்கு சாகித்ய அகாடமி

புதுடெல்லி: சிறந்த இலக்கிய படைப்பாளிகளைச் சிறப்பிக்கும் வகையில், 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பல வகையான படைப்புகளுக்கு ஆண்டு தோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

மொழிபெயர்ப்புப் பிரிவில் சிறந்த படைப்புகளுக்கான தமிழ் மொழிப் பிரிவில் கே.செல்லப்பனுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக இந்த விருதை அவர் பெறுகிறார். அதேபோல், இந்தியில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்ததற்காக டி.இ.எஸ்.ராகவனுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

செல்ல நாய்க்காக 12 விமானப் பயணச் சீட்டுகளையும் வாங்கினார்

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், கடந்த புதன்கிழமை மும்பையில் இருந்து சென்னைக்குத் தன் வளர்ப்பு நாயுடன் செல்வதற்காக பிசினஸ் வகுப்பில் இருந்த 12 இருக்கைகளையும் அவரே வாங்கிவிட்டார்.

ஒரு இருக்கைக்கான கட்டணம் ரூ.20,000 வீதம் ரூ.2.4 லட்சத்தை செலுத்தி சீட்டுகளை வாங்கினார். இந்தியாவில் செல்லப் பிராணிகளை, பயணிகளுடன் விமானத்தில் ஏற்றிச் செல்லும் ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியாதான்.

சதித்திட்டம்: கைது, சரண்

புதுடெல்லி: இந்தியாவில் தாக்குதல்களை அரங்கேற்ற பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிவருவதாக தெரிய வந்ததை அடுத்து டெல்லி போலிஸ் கண்காணிப்பை முடுக்கிவிட்டது.

புதுடெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆறு பேர் பிடிபட்டனர். அவர்களில் இருவர், பயங்கரவாதி என்று தெரிவிக்கப்படும் தாவூத் இப்ராகிம் கும்பலுக்காக பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் உறவினர் உமைதுர் உர் ரகுமான் என்பவர் உத்தரப் பிரதேசத்தில் கரேலி என்ற போலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சரண் அடைந்துள்ளார். அதேவேளையில், மும்பையில் ஜாகிர் உசைன் ஷேக் என்பவரும் பிடிபட்டதாக போலிசார் தெரிவித்தனர்.