பல்வேறு துறைகளுக்குப் புத்துயிரூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்
புதுடெல்லி: கொரோனா தொற்றுப் பாதிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறைக்குப் புத்துயிரூட்டும் வகையில், 500,000 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவதற்கு இலவச விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்றுப்பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதை அடுத்து, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துறைகள் மீண்டும் மூழு வீச்சில் இயங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சில சலுகைகளையும் அளித்து வருகின்றன.
அந்த வகையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் விதமாக வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நடவடிக்கையானது சுற்றுலாத் துறைக்கு மட்டுமல்லாமல் விருந்தோம்பல், சிவில் விமானப் போக்குவரத்து துறைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் என பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிப்பது, தடுப்பூசி தொடர்பான கொள்கை முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சு இதர அமைச்சு அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறது.
"இலவச விசா முதற்கட்டமாக 500,000 பேருக்கு வழங்கப்பட உள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இச்சலுகை நீடிக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் நாட்டுக்கு முதலில் வருகை புரியும் 500,000 பேருக்கு மட்டும் இந்தச் சலுகை அளிக்கப்படும்.
"இந்தச் சலுகையால் மத்திய அரசுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டாலும், பல்வேறு துறைகள் எழுச்சிபெற இந்த ஏற்பாடு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தியாவுக்குச் சுற்றுலா வருபவர்கள் இணையம் வழி விண்ணப்பித்துப் பெறக்கூடிய ஓருமாத கால விசாவுக்கு 25 அமெரிக்க டாலரும் ஓராண்டுக்கான விசாவுக்கு 40 டாலரும் கட்டணமாகச் செலுத்தி வந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயணக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த பின்னர் விசா நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

