அகமதாபாத்: ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத் துறைமுகத்தில் சிக்கியது.
மொத்தம் மூவாயிரம் கிலோ போதைப்பொருள் கடத்தி வரப்பட்டதாகவும் இந்தியாவில் ஒரே சமயத்தில் இந்த அளவு போதைப்பொருள் பிடிபட்டதில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் துறைமுகம் வழியாக இந்தப் போதைப்பொருள் குஜராத் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. கப்பலின் இரு கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ஹெராயின் போதைப்பொருள் ஆந்திராவில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அனைத்துலகச் சந்தை மதிப்பு சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் என்றும் இந்த வகை ஹெராயின் ஆப்கானிஸ்தானில்தான் அதிக அளவில் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும், டெல்லியில் உள்ள ஆப்கான் குடிமக்கள் சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் மத்திய புலனாய்வு முகமைகள் விசாரணை நடத்தி வருவதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கைதானவர்களுக்கு தலிபான், ஐஎஸ்ஐ ஆகியவற்றுடன் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாகத் தெரிகிறது.
கொள்கலன் சம்பந்தமான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆந்திர நிறுவனம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
மத்திய புலனாய்வு முகமைகள் சிறு அணிகளாகப் பிரிந்து போதைப்பொருள் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து விரிவாக விசாரிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே டெல்லி, அகமதாபாத், காந்திதாம் உள்ளிட்ட இடங்களிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் மேலும் சிலர் சந்தேக வளையத்தின் கீழ் கொண்டு வரப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பெரும் தொகை தேவைப்படுவதால், ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் போதைப்பொருளை இந்தியாவுக்கு கடத்தி, அதன் மூலம் பணம் திரட்ட பாகிஸ்தானும் இந்தியாவின் எதிரி நாடுகளும் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் மத்திய அரசை எச்சரித்துள்ளதாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.