ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி பெரும் வெற்றி
அமராவதி: ஆந்திராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அங்குள்ள 8,063 மண்டல ஊராட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 7,284 இடங்களை ஆளும்கட்சி கைப்பற்றியது. இதேபோல் வட்டார அளவிலான 553 ஊராட்சிப் பதவிகளில் 547 இடங்கள் ஒய்எஸ்ஆர் கட்சி வசமானது. கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதியே வாக்குப்பதிவு முடிந்துவிட்ட போதிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாகப் புகார் எழுப்பிய எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இதையடுத்து வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஆப்கான் நிலவரம்: சவூதி வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் பர்ஹான் அல்சாத்துடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சவூதி அமைச்சருடன் இருதரப்பு உறவு குறித்தும் பேசப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானில் அமையும் புதிய அரசை அங்கீகரிப்பதில் உலக நாடுகள் அவசரம் காட்டக்கூடாது என இந்தியா வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளுடன் மத்திய அரசு இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கான் விவகாரம் குறித்து இந்தியாவும் சவூதி அரேபியாவும் ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
யோகி: உத்தரப் பிரதேச தேர்தலில்
பாஜக 350 இடங்களில் வெற்றிபெறும்
லக்னோ: அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 350 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எந்தவித சந்தேகமும் யாருக்கும் தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தலின்போது மக்களுக்கு பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் உத்தரப் பிரதேசம் முற்றிலுமாக உருமாறி இருப்பதையும் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் மக்கள் கண்கூடாகப் பார்த்திருப்பதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அரசு நிர்வாகம், மாநிலப் பாதுகாப்பு ஆகியவற்றில் உத்தரப் பிரதேசம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என்றார் அவர்.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக
சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றார்
காந்திநகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். 58 வயதான அவர் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். நேற்று காலை சுமார் 11 மணியளவில் பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பஞ்சாப் மாநிலத்தின் பதினாறாவது முதல்வராகி உள்ள சரண்ஜித் சிங் சன்னி, அண்மையில் முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகியதன் பின்னணியில் உள்ள நவ்ஜோத் சிங் சித்துவின் தீவிர ஆதரவாளராக கருதப்படுபவர். மேலும், பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் இனத்தைச் சேர்ந்த முதல்வர் என்ற சிறப்பும் பெற்றுள்ளார்.

