காந்தியின் பேத்தி: எனது தாத்தா அரையாடைக்கு மாறிய மதுரை மண்ணில் நிற்பது பெருமைக்குரியது

காந்தியின் பேத்தி: எனது தாத்தா அரையாடைக்கு மாறிய மதுரை மண்ணில் நிற்பது பெருமைக்குரியது

1 mins read
f6f15902-cd0c-4199-b529-5af1b69ac52b
மதுரை அருங்காட்சியகத்தில் இருந்த காந்தி சிலைக்கு அவரது பேத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். படம்: மாலை மலர் -

இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி, மதுரை நகருக்கு வந்தபோது அங்கிருந்த தொழிலாளர்களைப் பார்த்து தன்னுடைய உடையையும் மிக எளிமையாக மாற்றிக்கொண்டார்.

1921 செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ரயிலில் அவர் மதுரைக்கு வந்தார். அப்போது வழியெங்கும் மக்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஆனால் தொழிலாளர்கள், விவசாயிகள், சாமானியர்கள் என பலரும் இடுப்பில் ஓர் அரைத்துண்டு மட்டுமே அணிந்திருந்தனர்.

இதைப் பார்த்த காந்தி, தன்னை நம்பியிருக்கும் மக்களுக்கு இரண்டு முழம் துணிக்குக்கூட வழியில்லையே என்று வேதனைப்பட்டார்.

அந்நகரில் தங்கிருந்த அவர் அன்று இரவு முழுவதும் அதே சிந்தனையில் இருந்தார்.

மறுநாள் (22ஆம் தேதி) வெளியே வந்த காந்தி அரையாடையுடன் காட்சியளித்தார்.

அதன் பிறகு மேலாடையை அவர் அணியவே இல்லை.

ஒரு மனிதனை மகாத்மாவாக உயர்த்திய அந்தச் சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் 100 ஆண்டுகள் ஆனது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா கலந்துகொண்டார்.

மதுரை அருங்காட்சியகத்தில் இருந்த காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாரா காந்தி, "தமிழகம் என்னுடைய தாய் மண் ஆகும். எனது தாத்தா அரையாடைக்கு மாறிய மதுரை மண்ணில் கால்பதித்து நிற்பது பெருமையாக இருக்கிறது," என்றார்.

குறிப்புச் சொற்கள்