புதுடெல்லி: பிரிட்டனில் கோவிஷீல்ட் தடுப்பூசி அங்கீகரிக்கப்படாதது பாரபட்சமான செயல் என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
பிரிட்டிஷ் அரசின் இந்த நடவடிக்கையானது அங்கு செல்லும் இந்திய குடிமக்களைப் பாதிக்கும் என்று அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டிஷ் அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக அவர் கூறினார்.
"இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் என்றாலும் பிரிட்டனில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க இயலாது. இந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்படும் என பிரிட்டிஷ் அரசு உறுதி அளித்துள்ளது," என்றார் ஹர்ஷ் வர்த்தன்.
ஒருவேளை பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், இந்தியாவும் பதில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அதற்கான உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
முன்னதாக இந்தியப் பயணிகளுக்கு பிரிட்டன் வகுத்துள்ள புதிய பயண விதிமுறைகள் குறித்து அதன் வெளியுறவு அமைச்சரிடம் இந்தியாவின் மனக்குறையை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தி இருந்தார்.

