பஞ்சாப் முதல்வர் ராகுல் காலில் விழுந்து ஆசி பெற்றதாக சர்ச்சை
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தமது பதவியேற்பு நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் காலில் விழுந்து ஆசி கேட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் 58 வயதான முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தம்மைவிட இளையவரான 51 வயது ராகுல் காந்தியின் காலில் விழுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, "இதுதான் காங்கிரசின் கலாசாரம்" என ஆம் ஆத்மி கட்சி சாடியுள்ளது. பாஜகவும் தன் பங்குக்கு காங்கிரசை விமர்சித்துள்ளது.
டெல்லியில் டெங்கி பாதிப்பு குறைந்தது
புதுடெல்லி: கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் டெல்லியில் டெங்கி பாதிப்பு குறைவாக உள்ளது என அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் தற்போது டெங்கி பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அண்மைய சில தினங்களாக அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் நடப்பு செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 87 பேருக்கு டெங்கி பாதிப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 188 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்று சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
நிதின் கட்காரி: சீன நிறுவனங்கள் முதலீடு ஏதும் செய்யவில்லை
புதுடெல்லி: இந்திய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்யவில்லை என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா தனது முதலீடுகளைக் குறைத்துவிட்டு, ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என்றார். இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கடந்த ஆண்டு நிதின் கட்காரி கூறியிருந்தார். இந்தநிலையில், சீனாவில் இருந்து சில திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. இதையடுத்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்த இயலும்: மோடி நம்பிக்கை
புதுடெல்லி: தமது அமெரிக்க பயணத்தின் மூலம் அமெரிக்காவுடனான விரிவான உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்த முடியும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐநா மன்ற கூட்டம், குவாட் மாநாடு ஆகிய இரு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். முன்னதாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், தமது பயணத்தின் மூலம் முக்கிய கூட்டணி நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியா வுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இயலும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குவாட் உச்ச மாநாட்டின் வழி எதிர்காலத் திட்டங்களினூடே முன்னுரிமைகளை அடையாளம் காண முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி: காஷ்மீரில் ஏழு இடங்களில் சோதனை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஏழு வெவ்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கெனவே பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் பிடிபடுவார்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே உள்ள சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. அது பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது.
பரிசுப்பொருள்: மத்திய அரசு அனுமதி
புதுடெல்லி: வெளிநாட்டுப் பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருள்களை மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தாங்களே வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது சில பரிசுகள் அளிக்கப்படும். அவற்றை வெளியுறவு அமைச்சிடம் ஒப்படைப்பதே வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி உயர் அதிகாரிகள் பரிசுப் பொருள்களைப் பெறவும் அவற்றைத் தாங்களே வைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

