புதுடெல்லி: சார்க் மாநாட்டில் தலிபான்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சார்க் உச்ச மாநாடு ரத்து செய்யப்பட்டது.
செப்டம்பர் 25ஆம் தேதி சார்க் மாநாடு நடைபெற இருந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து, தலிபான் பிரதிநிதிகள் அம்மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இந்தியா உள்ளிட்ட சில உறுப்பு நாடுகள் இதை ஏற்கவில்லை. இதையடுத்து உறுப்பு நாடுகளின் ஆதரவு இல்லை என்பதால் மாநாடு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பில் தெற்காசியாவைச் சேர்ந்த இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசை அங்கீகரிப்பதில் உலக நாடுகள் அவசரம் காட்டக்கூடாது என இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் சார்க் அமைப்பில் தலிபான்கள் பங்கேற்பதை இந்தியத் தரப்பு அறவே விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

