பெண்ணிடம் அத்துமீற முயன்றவர் 2,000 பெண்களின் ஆடைகளை வெளுக்க உத்தரவு

பெண்ணிடம் அத்துமீற முயன்றவர் 2,000 பெண்களின் ஆடைகளை வெளுக்க உத்தரவு

2 mins read
64981645-be09-4f63-ad5d-6d9286fe509f
ஆறு மாதங்களுக்குத் துணிகளைத் துவைக்கவும் தேய்க்கவும் ஆவதற்கான செலவுகளை அந்த ஆடவரே ஏற்க வேண்டும். சித்திரிப்புப் படம்: ஏஎஃப்பி -

பாட்னா: ஒரு பெண்ணிடம் அத்துமீற முயன்ற ஆடவர், இப்போது ஊரிலுள்ள பெண்கள் அனைவர்க்கும் அடிமை வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான லாலன் குமார், 20, என்ற அந்த ஆடவர், அடுத்த ஆறு மாதங்களுக்கு ஊரிலுள்ள எல்லாப் பெண்களின் ஆடைகளையும் துவைத்து, தேய்த்துத் தரும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிபந்தனையின் அடிப்படையில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பீகார் மாநிலம், மாஜோர் எனும் சிற்றூரில் உள்ள கிட்டத்தட்ட 2,000 பெண்களின் ஆடைகளையும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர் தோய்த்து, தேய்த்துத் தர வேண்டும்.

இந்த ஆறு மாத இலவச துணிவெளுப்பு, தேய்ப்பு சேவைகளுக்கான சலவைத்தூள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அவரே ஏற்க வேண்டும்.

துணி வெளுக்கும் வண்ணான் வேலை செய்து, வாழ்க்கை நடத்தி வரும் லாலன் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பாலியல் வன்கொடுமை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்நிலையில், "நீதிமன்றத் தீர்ப்பால் ஊரிலுள்ள பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்," என்று சொன்னார் மாஜோர் ஊராட்சி மன்றத் தலைவர் நசிமா கத்தூன்.

"இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. பெண்கள் மீதான மரியாதையை இது உயர்த்தும். அத்துடன், பெண்களின் கண்ணியத்தைக் காக்கவும் இது உதவும்," என்றார் அவர்.

நீதிமன்ற உத்தரவின்படி லாலன் நடந்துகொள்கிறாரா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு ஊர்க்காரர்களிடமே விடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சமூகத்தில் ஒரு பேசுபொருளாக ஆக்கி, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவ்வூரில் வசிக்கும் பெண்கள் குறிப்பிட்டனர்.

"இது ஒரு குறிப்பிடத்தக்க, சமூகத்திற்குப் படிப்பினையாக விளங்கும் வித்தியாசமான தண்டனை," என்றார் அஞ்சும் பர்வீன் எனும் பெண்மணி.

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 28,000க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைப் புகார்கள் பதிவாயின.

குறிப்புச் சொற்கள்