புதுடெல்லி: சென்னையைச் சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதத்தின் (படம்) 'ஃப்ரெஷ் வொர்க்ஸ்' நிறுவனம் அடைந்துள்ள திடீர் வளர்ச்சி அமெரிக்க தொழில் முனைவோரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு குறுகிய காலத்தில் 32 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் தனது நிறுவனத்தைத் தொடங்கிய கிரிஷ், பின்னர் தனது வாடிக்கையாளர்களுக்கு அருகே இருந்தால் நல்லது என்ற எண்ணத்துடன் அமெரிக்காவில் அலுவலகம் அமைத்து செயல்படத் தொடங்கினார்.
கொரோனா நெருக்கடி வேளையில் பல்வேறு நிறுவனங்கள் மின்னிலக்க பணி முறைக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது கிரிஷ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கைகொடுத்துள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்ததால் நிறுவனத்தின் வருவாயும் கூடியது. இன்று 52,500 வாடிக்கையாளர்களுடன் நடப்பாண்டின் முதல் பாதியில் 'ஃப்ரெஷ் வொர்க்ஸ்' நிறுவனத்தின் வருமானம் 169 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வருமானம் 110 மில்லியன் டாலராக இருந்தது. மேலும், ஓராண்டுக்கு முன்பு 57 மில்லியன் டாலர் நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில், அது தற்போது 9.8 மில்லியனாக குறைந்துள்ளது.
ஒரு மில்லியன் வருமானம் என்பதுதான் தமது முதல் இலக்காக இருந்தது என்கிறார் கிரிஷ். எனினும், பின்னர் சில திட்டங்களும் செயல்பாடுகளும் மாறியதில் அவரது நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மளமளவென அதிகரித்துள்ளது.
தற்போது அவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 13 பில்லியனாக அதிகரித்துள்ளது.
"எங்கள் நிறுவனத்துக்கு விற்பனைப் பிரதிநிதிகள் யாரும் தேவைப்படவில்லை. காரணம், நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரும் செயலிதான் எங்களது விற்பனைப் பிரதிநிதி. இந்த வளர்ச்சி நீடிக்கும்," என்கிறார் இந்நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினரான சமீர் காந்தி.

